ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் என்னென்ன முறைகேடுகளை செய்ய இயலுமோ அத்தனையையும் செய்து சொத்துகளை வாரிக் குவித்துக்கொண்டிருக்க மக்களோ வாழ்வின் விளிம்பு நிலைக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.
இந்தக் கொடுமையிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார் லெனின். அதற்கு ஒரு கம்யூனிச அரசமைப்பை நிறுவ வேண்டும். அதை உடனடியாக கட்டமைப்பது சாத்தியமல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆகவே ஒரு மக்கள் புரட்சியின் மூலம் கம்யூனிசத்திற்கு முன்னான சோசலிசத்தைக் கட்டமைக்க அவர் உறுதி எடுக்கிறார்.
இதற்காக மக்களை ஏதோ ஒருவகையில் சந்தித்து உரையாற்றுகிறார். அவரது உரைகேட்டு சூடேறிய இளைஞர்கள் புரட்சிக்கு தங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் முன் திரள்கிறார்கள். இதுபோன்ற தினவுமிக்க இளைய பட்டாளம்தான் லெனின் விரும்புகிற மக்கள் புரட்சிக்கு மிகவும் அவசியம். இதை வேறு யாரையும்விட நன்கு உணர்ந்தவர்தான் லெனின். ஆனாலும் அவர்களை அவர் நிராகரிக்கிறார். அவர்களிடம் கூறுகிறார்,
“உங்களது முதல் கடமை படிப்பு, உங்களது இரண்டாது கடமை படிப்பு, உங்களது மூன்றாவது கடமையும் படிப்புதான்”
அன்றைய இளைய பிள்ளைகள் இதை தங்களது தலைவனின் கட்டளையாக ஏற்றார்கள்.
புரட்சி வெற்றிபெற்ற சில நாட்களில் “உலகை குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலை எழுதிய ஜான் ரீட் லெனினை சந்திக்கிறார். ”மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்கிறார்.
இந்த மண்ணை விவசாய மண்ணாகவும், தொழில் மண்ணாகவும் மாற்ற வேண்டும். அதற்கு மின் உற்பத்தியை பேரதிகமாக்க வேண்டும் என்று பதில் அளிக்கிறார்.
அந்தத் தேதியில் அது சாத்தியமே இல்லை என்பது ஜான் ரீடிற்கு தெரியும். இது எப்படி சாத்தியம் என ஆச்சரியத்தோடு கேட்கிறார். சோசலிசம் அதை சாதிக்கும் என்று லெனின் சொல்கிறார். அதை நம்பமுடியாதவராக இருக்கிறார் ஜான் ரீட். ஆகவேதான் “மாஸ்கோவில் கனவு காணும் ஒரு மனிதனை நான் சந்தித்தேன்” என்று எழுதுகிறார்.
அதே ஜான் ரீட் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோ வருகிறார். லெனின் சொன்னது அத்தனையும் மலர்ந்து சிரித்தபடி அவரை வரவேற்கின்றன. இப்போது எழுதுகிறார்,
“ஒரு மனிதனின் கனவு நிஜமானதை ரஷ்யாவில் கண்டேன். ஆனால் அந்த மனிதன் இன்று உயிரோடு இல்லை”
இந்த மாபெரும் மாற்றத்திற்கான காரணங்களாக கீழ்க்காணும் மூன்று விஷயங்கள் கண்முன் பளிச்சிடுகின்றன,
1) விவசாயத்துறையில் நினைத்தே பார்க்கமுடியாத வகையில் நிகழ்ந்திருந்த புரட்சிகர மாற்றங்கள்
2) தொழிற்துறையில் நிகழ்ந்திருந்த புரட்சிகரமான பாய்ச்சல்
3) அபரிதமான மின் உற்பத்தி
இவைகள்தான் காரணங்கள். ஆனால் இந்தக் காரணங்கள் அளவிற்குப் பேசப்படாத ஒரு காரணம் இருக்கிறது.
அது மக்களுக்கான கல்வி, சமூகக் கல்வி. மக்களுக்கான மனிதர்களாக மாணவர்களை மாற்றித்தருகிறமாதிரி கட்டமைக்கப்பட்ட கல்வி.
வெறுமனே உற்பத்தியை மட்டும் பெருக்கி இருந்திருந்தால் அந்த நாடு வளமையானதொரு நாடாக மட்டுமே மாறியிருக்கும். தமக்கு கிடைத்த வளமை தமக்கானது மட்டுமல்ல, உலகின் பசியை போக்குவதற்குமான பங்கு அதில் இருக்கிறது என்று உணர்ந்த சமூகமாக மாறியிருக்க வாய்ப்பில்லை.
தமக்கு கிடைத்திருக்கும் தொழில்நுட்பத்திலும் அறிவிலும் இந்த உலகம் உய்வதற்கான பங்கும் இருக்கிறது என்ற உணர்வை வெறும் உற்பத்தி பெருக்கம் மாட்டும் ஒரு சமுதாயத்திற்கு வழங்கி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
தன்னிடம் இருக்கும் படை பலமும் ஆயுத பலமும் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அது போர்மூலம் வந்தாலும் பேரிடர்மூலம் வந்தாலும் அவற்றினின்று அந்த மக்களை பாதுகாப்பதற்கானது என்ற உணர்வை வளமையும் அறிவும் மட்டும் ஒரு சமூகத்திற்கு தந்துவிட முடியாது,
1917 புரட்சிக்குப் பிறகு ரஷ்யா மேற்சொன்ன அனைத்தையும் செய்தது.பிறரது இன்னல் கண்டு வருந்துவதும் எந்த பிரதி பலனும் பார்க்காது அதை துடைப்பதற்கான பணியை செய்வதுமாக சோசலிசக் கட்டமைப்பு தகறும்வரை அது ஈரத்தோடே இயங்கிக் கொண்டிருந்தது.
அப்படியானதொரு சமூகத்தை கட்டமைப்பதற்கான கல்வித் திட்டத்தை அது கட்டமைத்தது.
“அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக்கடை”
உலகம் அறிவை புத்தியாகவும் பிறரது துயர் துடைத்தலை இரக்கம் என்றும் இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது. ஆனால் வள்ளுவரோ பிறரது வலியை போக்கும் செயல் இரக்கமல்ல என்றும் அதுதான் அறிவின் அடையாளம் என்றும் கூறினார்.
சோசலிசக் கட்டுமானம் சிதறும் வரை முன்னூற்றிப் பதினைந்தாவது குரளுக்கான அடையாளமாக ரஷ்யா விளங்கியது.
1917 ஒட்டி ரஷ்யாவில் தோன்றி பெருவிளைச்சலைக் கண்ட இந்த கல்விச் சிந்தனை 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவத்தில் இருந்திருக்கிறது. இருந்திருக்கிறது என்று சொல்வதன் மூலம் இந்த சிந்தனை மூப்பினை உரிமை கொண்டாட முயல்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றெல்லாம் மறுப்பதற்கில்லை.
மிகப்பெரிய கல்விச் சிந்தனையாளரான பாவ்லோ பிரையர் இருபது ஆண்டுகள் ஆய்விற்குப் பிறகு இந்தியக் கல்வியை “வங்கிமுறைக் கல்வி” என்று குறிப்பிட்டார். இந்தக் கல்வி முறையில் மாணவன் என்பவன் வெறும் வங்கி. வங்கியில் வங்கிக்கானது எதுவும் இருக்காது. வங்கியில் பணம் சேமிக்கப்படுவதுபோல யாருக்கோ தேவைப்படும் அறிவை ஆசிரியர் மாணவனது மூளையில் அடுக்கி வைக்கிறார். அதை யாரோ ஒருவரோ அல்லது குழுவோ தமக்கு தேவையானபோது எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.
பெரியாரும்கூட நமது கல்வி முறையை அப்படித்தான் பார்த்தார். அதனால்தான் அவர் படித்தவர்களை “நடமாடும் அலமாரிகள்” என்று ஒருமுறை குறிப்பிட்டார். யாரோ ஒருவனுக்கு தேவைப்படும் அறிவை சுமந்து திரியும் அலமாரிகளாக இங்கு படித்தவர்கள் இருப்பதாக பெரியார் கவலைப் பட்டார்.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு இந்தியாவின் கல்விக் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளவும் எடுத்து சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
தமிழ் நாட்டிற்கு வெளியே இருக்கும் கல்வி சாதியைக் காப்பாற்றுவதற்காக, நால் வர்ணத்தை பாதுகாப்பதற்காக்க் கட்டமைக்கப் பட்டது. சாதியில் இருந்தும் வர்ணத்தில் இருந்தும் பிள்ளைகளை மீட்டெடுப்பதற்கான கட்டமைப்பு தமிழ்க் கல்வி.
பொதுவாக குழந்தைகளை கற்றுத் தேர்வதற்காகத்தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். ஆனால் அண்ணல் அம்பேத்கர் வேறுமாதிரி சொன்னார்.
“The children should unlearn what they have learnt” என்பார் அவர். இன்றைய சூழலிலும்கூட பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக வீடும், தெருவும், சமூகமும் சாதியையும் ஏற்றத்தாழ்வையும் குழந்தைகளுக்கு கற்பித்துவிடுகின்றன. அதைத் தொலைத்துவிட்டு வருவதற்குத்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்கிறார் அண்ணல்.
அப்படியான பள்ளிகளாகத்தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மைப் பள்ளிகள் இருக்கின்றன.
”கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்பது குறள்.
என்று மூன்று சொற்களுக்குள் சுருக்கித் வகைப்படுத்துவார் தோழர் தா.பாண்டியன்.
எதைக் கற்கவேண்டுமோ அதைக் கற்க வேண்டும்
எதைக் கற்க வேண்டுமோ அதைப் பிழையறக் கற்க வேண்டும்
கற்க வேண்டியதை பிழையறக் கற்றபின் கற்றதன் வழி வாழ வேண்டும்
எங்கள் கல்வியில் நிறைய குறைகள் இருக்கலாம். இருக்கலாம் என்ன, இருக்கின்றன. ஆனால், நிச்சயமாக இந்தக் கல்வி வங்கிமுறைக் கல்வியல்ல. சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்க் கல்வி ஒருபோதும் நகர்கிற அலமாரிகளை உருவாக்குவதில்லை.
தமிழ்க் கல்வி “மானுடச் சமூகம் நானென்று கூவு” என்று தன் பிள்ளையைக் கேட்கும்.
“குகனொடு ஐவரானோம்” என்று ராமனைக் கொண்டும் சமத்துவம் போதிக்கும்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொல்லும் எங்கள் கல்வி.
*************
("திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி” மலரில் வந்த கட்டுரை)