Saturday, January 21, 2012

இந்தாப் பிடி செங்கொடி



இருபது ஆண்டுகளுக்குமேல் இருக்கும். தோழர் என்.ராமக்கிருஷ்ணன் எழுதிய “ ஆஷர்மில் பழநிச்சாமி” என்ற சிரிய நூலினை கையில் திணித்து இந்த மாத சோலைக் குயில்களுக்கு இது பற்ரி எழுது என்றார் நந்தலாலா.


கல்லூரியில் எங்கோ படித்துக் கொண்டிருந்த நேரம். பழநிச்சாமி ஆஷர் மில்லின் உரிமையாளர் போலும் என்கிற சராசரிப் புரிதலைத் தவிர வேறு எதுவும் அந்தப் புள்ளியில் என்னிடமில்லை.

உள்ளே போகப் போகத்தான் விரிந்தது பிரமிப்பு. பழநிச்சாமி அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர். தொழிற்சங்கத்தின் தலைவர். உரிமையாளார் பெயரோடு பொருத்திப் பேசப் படாத அந்த ஆலையின் பெயர் ஒரு ஊழியனோடு பொருத்திப் பேசப் படுகிறதென்பது அந்தக் காலத்தில் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பொதுவாக தொழிற் சங்கத் தலைவர்கள் என்றால் வறட்டுத் தனமாக மோதும் குணம் கொண்டவர்கள் என்று என்னுள் செழித்து வளர்ந்திருந்த பிம்பத்தை அது சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டது.

அதில் வரும் ஒரு சம்பவம் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு நெளிவு சுழிவுடன் வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அப்போது இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப் பட்டிருந்த நேரம். பழநிச்சாமியின் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் விலை வைத்திருந்த நேரம்.

திருப்பூர் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை. மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அந்த நிலையிலும் அவருக்கு ஆசை.

எல்லோரும் அசந்து உறங்கிய முந்தைய இரவில் மாறு வேடத்தில் வந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே மே தின வாழ்த்து சொன்ன ஒரு தட்டியை கட்டுகிறார்.

அடுத்த நாள் அங்கே ஒரு பெரும் திரள் கூடுகிறது. மாறு வேடத்தில் பழநிச்சாமியும் அங்கே இருக்கிறார்.
தட்டியை அகற்ற எத்தனித்த காவலர்கள் பின் வாங்குகிறார்கள்.  தட்டியின் கீழ் மூலையில் களி மண்ணால் வெடி போன்று செய்து கருப்புத் துணியால் சுற்றி திரி இணைத்து கட்டியிருந்தார்.

அதற்கு கீழே “தோழர்கள் தொட வேண்டாம். தொடும் துரோகிகள் அழியட்டும்” என்று எழுதியிருந்தார்.

எந்தக் காவலர் நெருங்குவார்.

அப்போது ஒரு ரயில் வருகிறது.

மாறு வேடத்தில் இருந்த பழநி சொல்கிறார்,

“ ரயில் வந்தால் அதிர்ச்சியில் வெடித்துவிடும் வெடி”

“ என்ன செய்யலாம்?”

“ரயிலை நிறுத்துங்கள்”

“எப்படி?”

“இந்தக் கொடிகளைக் காட்டுங்கள்”

தயாராய் வைத்திருந்த சிவப்புக் கொடிகளைத் தருகிறார்.

காவலர்கள் சிவப்புக் கொடிகளோடு ரயிலை நிறுத்த ஓடுகிறார்கள்.

சிரிக்கிறார் பழநிச்சாமி.

எந்தக் காவலர்கள் செங்கொடியை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் கைகளிலேயே  செங்கொடிகள்.

அவரது புன்னகை எவ்வளவு உன்னதமானது.


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...